இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் விசா இல்லாமல் ’விசா-ஆன் -அரைவல்’ முறையில் 60 நாடுகளுக்கு பயணம் செய்யமுடியும். அவை எந்தெந்த நாடுகள் என பார்ப்போம்...
ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 87வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (ஐஏடிஏ) தரவைப் பயன்படுத்தி 199 பாஸ்போர்ட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்று தரவரிசைப்படுத்துகிறது. இதன் மூலமாக இந்தியாவின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் எளிய முறையில் 60 நாடுகளுக்கு செல்ல முடியும்.
இந்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் பாஸ்போர்ட்டை வைத்து 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதைத் தொடர்ந்து 2 வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகளின் பாஸ்போர்ட்டை கொண்டு 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு 27 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும்.
கடவுச்சீட்டுக் குறியீடு என்பது ஒரு நாட்டுக்கு மற்ற நாடுகளுடன் எந்த இராஜதந்திர உறவுகளின் வலிமையை வரையறுக்கிறது. ஒரு நாடு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது சென்று சேர்ந்தவுடன் விசா எடுத்துக்கொள்ளும் வகையிலான அளவில் சக்திவாய்ந்த நிலையில் உள்ளது என்பதை இந்த தரவரிசைக் குறியீடு மூலமாக அறிந்துகொள்ள முடியும்.
தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு இந்தியர்கள் 'விசா-ஆன்-அரைவல்' முறையில் செல்லலாம். அதாவது விசா இல்லாமல் அந்த நாட்டிற்கு சென்ற பின்னர் விசா எடுத்துக் கொள்ளலாம். இதுபோல இந்திய குடிமக்களுக்கு விசா-ஆன்-அரைவல் சேவைகளை வழங்கும் 21 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன. இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இந்த முறையில் இந்தியர்கள் செல்லலாம்.