நெல்லையில் விவசாயி வீட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஆடுகள் இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருநெல்வேலி மானூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்து(34) விவசாயியான இவர் 35 ஆடுகளை வளர்த்துவருகிறார். இவர் தினமும் தன் வீட்டுத் தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம். இவர் வழக்கம்போல் நேற்று இரவு, தன் தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைத்துவிட்டு அவர் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவில் திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. முத்து வெளியே வந்தபோது ஆடுகளை கூட்டமாக வந்த நாய்கள் கடித்துக் கொண்டிருந்தது. இதில் 17 ஆடுகள் துடி, துடித்து இறந்தன. இதேபோல் நான்கு ஆட்டுக்குட்டிகளையும் நாய் தூக்கிச் சென்றது. 15 ஆடுகளுக்கு நாய் கடித்ததில் காயம் ஏற்பட்டது.
விவசாயி முத்து இதுதொடர்பாக மானூர் போலீஸில் புகார் கொடுத்தார். அந்தப்புகாரில், “மானூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காற்றாலை நிறுவனம் ஒன்று உள்ளது. அங்கு பாதுகாப்புப் பணிக்காக நிறைய நாய்கள் வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்கள் கூட்டமாக வந்து ஆடுகளைக் கடித்துவிட்டது. கடந்தவாரம் இதே நாய்கள் 40 கோழிகளைக் கடித்துக் கொன்றுவிட்டது. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயின் உரிமையாளரையும் விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.