வளர்ப்பு நாயுடன் தோட்டத்திற்கு சென்ற முதியவர் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தனது வளர்ப்பு நாயுடன் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (62). விவசாயியான இவர் தினமும் காலையில் தனது வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு செல்வது வழக்கம். அதன்படி, இன்று காலை வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்றார். அப்போது, ராஜாங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகே சென்ற போது அங்கு காட்டுப்பன்றிக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை கணேசன் எதிர்பாராத விதமாக மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது. இது குறித்து, தகவல் அறிந்த வந்த உசிலம்பட்டி காவல்துறையினர் கணேசனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தோட்ட உரிமையாளர் ராஜாங்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னை வளர்த்த எஜமானை காப்பாற்ற முயன்ற நாயும், அவரும் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.