`உச்ச நீதிமன்ற தீர்ப்பை எச்சரிக்கையோடு கையாள வேண்டும்'- தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

By காமதேனு

``மேகேதாட்டு அணை விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்'' என்று தமிழக விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு பல்வேறு மறைமுக சூழ்ச்சியில் ஈடுபடுகிறது. அரசியல் லாபம் கருதி மத்திய அரசும் அதற்கு துணை போகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் சட்டவிரோதமாக மத்திய அரசால் கொடுக்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி கர்நாடக அரசு தயாரித்த வரைவு திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த முயற்சித்து வருகிறது.

இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போவதாக ஆணைய தலைவரும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இறுதி முடிவு அறிவிக்காமல் மேகதாது அணை குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்கலாம், ஆனால் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்றும், அதே நேரத்தில் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது எனவும் மறுத்துள்ளது.

இது குறித்து வரும் 26-ம் தேதி வழக்கு விசாரணையின்போது ஆணையத்தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில தமிழக அரசு எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் வரும் 26-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்குகிற வரையிலும் ஆணையக் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க கர்நாடகம் திடீரென முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்த அனுமதித்து அக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை குறித்து விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும். அதில் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் ஒத்த கருத்தோடு மேகேதாட்டு அணை கட்டினால் தமிழகம் அழிந்து போகும் என்கிற ஆதாரங்களோடு வலிமையாக எடுத்துரைத்து நிராகரிக்க கோரி பெரும்பான்மை கருத்தை உச்ச நீதிமன்றத்திற்கு ஆணைய தலைவர் மூலமாக அறிக்கையாக தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். அதற்கான வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் களமிறங்க வேண்டும்.

ஏற்கெனவே ஆணைய கூட்டத்தில் வரைவு திட்டம் விவாதத்திற்கு அனுமதித்தால் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என அறிவித்திருப்பதை மறுபரிசீலினை செய்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்று நமது பாதிப்புகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து எதிர்ப்பை உறுதி செய்திட வேண்டும்.

அத்துடன் எக்காரணத்தைக் கொண்டும் வரும் 22-ம் தேதி நடக்கவிருக்கிற ஆணைய கூட்டம் ஒத்திப்போகாத வகையில் நடத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி நடைபெற்று ஒத்த கருத்து உருவாக்கி பெரும்பான்மை கருத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றத்தால் பெரிய நெருக்கடிகள் ஏற்படலாம் என்கிற அச்சத்தால் மறைமுக நடவடிக்கையில் கர்நாடகம் ஈடுபடுவதாக தெரிகிறது. எனவே அதை தடுத்து முறியடித்து பெற்ற உரிமையை பாதுகாப்பதற்கு தமிழக அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் முகாமிட்டு தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இதே நிலையில் செயல்பட்டு தமிழக உரிமையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE