கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் சுமார் 554.3 சதுர கிலோமீட்டர் வன நிலம், வனம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றப்பட்டது என்று மத்திய அரசு நேற்று மக்களவையில் தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக 112.78 சதுர கி.மீ வன நிலம் சுரங்கத் தொழிலுக்கு மாற்றப்பட்டுள்ளது. 100.07 சதுர கி.மீ வன நிலம் சாலை அமைப்பதற்காகவும், 97.27 சதுர கி.மீ வனப்பகுதி பாசன வசதிக்காகவும் மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாக மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சமர்ப்பித்த தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பாதுகாப்புத் திட்டங்களுக்காக 69.47 சதுர கி.மீ வன நிலத்தையும், நீர்மின் திட்டங்களுக்காக 53.44 சதுர கிலோமீட்டரையும், மின்கம்பிகள் அமைப்பதற்காக 47.40 சதுர கிலோமீட்டரையும், இரயில்வேக்காக 18.99 சதுர கிலோமீட்டரையும் மாற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், 2019-ம் ஆண்டில் 195.87 சதுர கிலோமீட்டர் வன நிலத்தையும், 2020-ல் 175.28 சதுர கி.மீ மற்றும் 2021-ல் 183.18 சதுர கி.மீ நிலத்தையும் மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதித்தது. இருப்பினும், இந்திய வன ஆய்வு அறிக்கையின்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் மொத்த காடுகளின் பரப்பளவு 12,294 சதுர கிலோமீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
சமீபத்திய இந்திய காடுகளின் அறிக்கையின்படி 2019 மற்றும் 2021 க்கு இடையில் நாட்டின் காடுகளின் பரப்பளவு 1,540 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.