`சாட்சிகளை கலைத்துவிடுவார்; ஜாமீனை ரத்து செய்யுங்கள்': ஹேம்நாத்துக்கு எதிராக நண்பர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

By காமதேனு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், அவரது ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி, ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஹேம்நாத் எனனது நீண்டகால நண்பர். அவர் மூலம் சித்ராவை எனக்கு நன்றாகத் தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததேன். ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் நான் மட்டுமே சாட்சியம் அளித்தேன். இதற்காக ஹேம்நாத் என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹேம்நாத்தால் தன்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது_ அத்துடன் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார்.அவரை வெளியே சுதந்தரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE