கோயில் கொடைவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருந்து தப்பித்து ஓடிய கல்லூரி மாணவர் பிரதீப் என்பவர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரதீப்(20). இவர் மேலநீலிதநல்லூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். வடக்கு மாவிலியூத்து பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் கொடைவிழா நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு பிரதீப் தன் நண்பர்களுடன் நேற்று இரவு சென்று இருந்தார். அப்போது பிரதீப் குரூப்புக்கும், மற்றொரு ஊரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இதில் பிரதீப் மற்றும் அவரது நண்பர்களை எதிர்தரப்பினர் தாக்க முயன்றனர். இதில் இருந்து தப்பிக்க ஓடிய பிரதீப், இருட்டில் தவறுதலாக ஓடும்போது கிணற்றில் விழுந்தார். இதைப் பார்த்தவர்கள் மீட்டு அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இவ்விவகாரம் குறித்து சின்னகோவிலான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் பிரதீப் குழுவினரைத் துரத்தியதில் சுரண்டையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.