`எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 32,591 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை'- மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் அதிர்ச்சி தகவல்

By ஆர். ஷபிமுன்னா

மத்திய அரசின் அலுவலகங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட 32,591 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த அதிர்ச்சி தகவலை இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திராசிங் தெரிவித்துள்ளார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதியின் திமுக எம்.பி டி.ரவிகுமார் இது குறித்து கேள்வி எழுப்பி பேசுகையில், `எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றிய அரசின் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இருக்கிறதா? இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்?’ என வலியுறுத்தினார்.

இதற்கு பிரதமர் அலுவலகத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திராசிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், `ஜர்னைல் சிங், வி.லஷ்மினாராயண் மற்றும் சிலர் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜனவரி 28-ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, 12.04.2022 தேதியிட்ட அலுவலக குறிப்பாணை எண்-36012/I6/2019-Estt(Res) ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன், பட்டியல் சாதிகள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) ஆகிய பிரிவினரின் பிரதிநிதித்துவத்தின் போதாமை பற்றிய தரவுகளை சேகரிக்க வேண்டும். அந்தத் தரவை ஒவ்வொரு கேடருக்கும் தனித்தனியாகப் பயன்படுத்துதல் வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கப் பணிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் தொடர்பான தரவை எங்கள் அமைச்சகம் சேகரிக்கிறது. இந்தப் பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான முன்னேற்றத்தையும் அது கண்காணிக்கிறது. 2021-ம் தேதி ஜனவரி 1ம் தேதி அன்று மேற்கூறிய 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பின்னடைவு உள்ளன. சமூக ரீதியான ஒத்தாசை நடவடிக்கை என்பது தொழில்துறையின் தன்னார்வ நடவடிக்கை தொடர்பானது ஆகும்.

இடஒதுக்கீடு ஒரு தீர்வல்ல என்று தொழில்துறை பிரதிநிதிகள் கருதுகின்றனர். ஆனால் விளிம்புநிலை பிரிவினருக்கான தற்போதைய ஆட்சேர்ப்புக் கொள்கையை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அவர்கள் அரசு மற்றும் பொருத்தமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளனர். குறிப்பாக அனைத்து மட்டங்களிலும் உள்ள எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்க தயாராக உள்ளனர். அதன்படி, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக அபெக்ஸ் இண்டஸ்ட்ரி அசோசியேஷன்கள் தங்கள் உறுப்பினர் நிறுவனங்களுக்குத் தன்னார்வ நடத்தை விதிகளைத் தயாரித்துள்ளனர். உதவித்தொகை வழங்கல், தொழில் பயிற்சி வழங்கல், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பயிற்சி போன்றவற்றை வழங்குதல் என்பன அந்த நடத்தை விதிகளில் அடங்கும்' என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜிதேந்திராசிங் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின் பின்னடைவு காலிப்பணியிடங்களின் விவரம்: ஜனவரி 01, 2021 வரையிலான நிலையின்படி, எஸ்சி பிரிவினருக்கு பாதுகாப்பு உற்பத்தித் துறையில் 1,871 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும், ரயில்வே துறையில் 4,445, நிதித் துறையில் 674, அஞ்சல் துறையில் 1,044, பாதுகாப்புத் துறையில் 1,803, வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையில் 66, உள்துறையில் 4,450, அணுசக்தித் துறையில் 116, வருவாய்த் துறையில் 2,762, கல்வித்துறையில் 901 இடங்கள் பின்னடைவு காலிப் பணியிடங்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல எஸ்டி பிரிவினருக்கு பாதுகாப்பு உற்பத்தி துறையில் 1,694, ரயில் துறையில் 4,405, நிதித்துறையில் 677, அஞ்சல் துறையில் 667, பாதுகாப்புத்துறையில் 1,167, வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் 43, உள்துறையில் 2821, அணுசக்தித் துறையில் 133, வருவாய்த் துறையில் 2,000, கல்வித் துறையில் 252 இடங்கள் பின்னடைவு காலிப் பணியிடங்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து காமதேனு இணையத்திடம் விழுப்புரம் தொகுதி எம்.பியான டி.ரவிக்குமார் கூறும்போது, "மொத்தப் பின்னடைவு காலிப் பணியிடங்களில் எஸ்சி பிரிவினருக்கு 18,132, எஸ்டி பிரிவினருக்கு 14,459 உள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் தொடுக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் இன்னும் எத்தனை ஆயிரம் இடங்கள் காலியாயின என்று தெரியவில்லை. இந்த 10 துறைகள் தவிர மற்ற துறைகளின் நிலவரத்தையும் அமைச்சர் தனது பதிலில் தரவில்லை. படித்த இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கும்போது எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் நிரப்பாமல் வைத்திருப்பது பாஜக அரசு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு துரோகம் செய்யும் அரசு என்பதற்கான சான்று" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE