கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: மதுரை, திண்டுக்கல்லில் 20 இடங்களில் ஐடி ரெய்டு

By மு.அஹமது அலி

முறையாக வருமான வரி செலுத்தாதது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல்லில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பால்சாமியின் மகன்களான அழகர் முருகன், ஜெயக்குமார், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் கிளாட்வே, ஜெயபாரத் மற்றும் அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி என்ற பெயர்களில் சொந்தமாக கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். மதுரையில் இந்நிறுவனங்களுக்கு சொந்தமான பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

முறையாக வருமான வரி செலுத்தாதது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை அவனியாபுரம் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான உரிமையாளர்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கோசுக்குறிச்சியில் இயங்கி வரும் ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன் எனும் தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிறுவனம், நத்தம்-துவரங்குறிச்சி நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் 10 இடங்களிலும், மதுரையில் 10 இடங்களிலும் என மொத்தமாக 20 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE