ஜார்க்கண்டில் பெண் எஸ்.ஐ லாரி ஏற்றிக் கொலை: ஹரியாணாவைத் தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!

By காமதேனு

ஜார்க்கண்ட் தலைநகரில் ராஞ்சி அருகே சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்ற பெண் எஸ்.ஐ சந்தியா தோப்னோ, லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார்.

ராஞ்சி உள்ள துபுதானா பகுதியில் புறக் காவல் பணியில் இருந்த சந்தியா, நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிவந்த வாகனம் ஒன்றை அவர் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், கால்நடை கடத்தல்காரர்கள் அவர் மீது லாரியை மோதச் செய்தனர். இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ராஞ்சி காவல் துறை கண்காணிப்பாளர் கௌஷல் கிஷோர் தெரிவித்திருக்கிறார். துபுதானாவில் சட்டவிரோதமாகக் கால்நடைகள் கடத்தப்படுவது அதிகரித்திருப்பதாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கச் சென்ற பெண் எஸ்.ஐ வாகனம் ஏற்றிக் கொலை செய்யப்பட்டிருப்பது ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியாணாவில் சட்டவிரோதக் கனிமவளச் சுரங்கத்தை ஆய்வுசெய்யச் சென்ற டிஎஸ்பி வாகனம் ஏற்றிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், ஜார்க்கண்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

டிஎஸ்பி படுகொலை

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் கனிமவள சுரங்கம் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆய்வு செய்ய நேற்று நண்பகலில் சென்ற டிஎஸ்பி சுரேந்திரசிங் பிஷ்னோய், லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது.

ஹரியாணாவில் சுரங்க மாஃபியாவின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும், மாநில பாஜக அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் புபேந்தர் சிங் ஹூடா தொடர்ந்து புகார் தெரிவித்துவரும் நிலையில், கனிமவளக் கடத்தல்காரர்களால் டிஎஸ்பி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE