அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிய வேண்டும்: குட்கா வழக்கில் அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம்

By ரஜினி

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான குடோனில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரியும் கைப்பற்றப்பட்டது.அந்த டைரியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக உயர் அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்பி விமலா,மற்றும் காவல்துறை அதிகாரிகள், கலால்துறை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர். அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், சட்ட விரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்களுக்குச் சொந்தமான 246 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது. குறிப்பாக குற்றம்சாப்பட்டவர்கள் உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் தமிழக அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை உள்ளது.. அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE