என்ஐஏ பிடியில் திருச்சி சிறைச்சாலை சிறப்பு முகாம்: கேரளா, டெல்லி மாநில அதிகாரிகள் ரெய்டால் பெரும் பரபரப்பு!

By காமதேனு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு முகாமில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து, உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 90 பேர் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர்ந்து பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதனையடுத்து முதல்கட்டமாக அவர்களில் 16 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்குள்ள கைதிகள் சிலர் போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. அது காவல்துறை அதிகாரிகளல் அப்போதே முறியடிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவர்களுக்கு போலி பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இவர்களுக்கு என்ன தொடர்பு என்பதை குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

அதேபோல கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு பலவித சந்தேகங்களை ஏற்படுத்தியது. தங்கக் கடத்தல் வழக்கில் இந்த முகாமில் உள்ள சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் என்ஐஏ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறப்பு முகாமில் உள்ளவர்களிடம் விசாரிப்பதற்காக திட்டமிட்டுள்ள என்ஐஏ அதிகாரிகள் இன்று கேரளா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் திருச்சி சிறப்பு முகாமுக்கு வருகை தந்து இருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முகாமில் உள்ளவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது திருச்சி சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE