உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது ட்விட்டரில் அவதூறு பதிவிட்டதற்காக யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியாக இருப்பவர் ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் குறித்து அவதூறு பதிவு ஒன்றை, சென்னையை சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் புகைப்படத்துடன், ‘அய்யா எதுவாக இருந்தாலும் என் கிட்டேயே கேட்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம். மாரிதாஸ் வழக்கை விசாரிக்கும் போது, ஒரு நாள் காலை 6 மணிக்கு அழகர்கோவிலில் யாரை சந்தித்தீர்கள்?' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவுக்காக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற கிளை பதிவுத்துறைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று உத்தரவிட்டார். இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், `யூடியூப்பர் சவுக்கு சங்கர் நீதித்துறை மீது அவதூறு பரப்பும் செயலையும், தனிநபர் தாக்குதல்களையும் செய்து வருகிறார். கடுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம். அவதூறுகளை ஏற்க முடியாது. கடந்த சில மாதங்களாக சவுக்கு சங்கர் தனது பார்வையை என் மீது திரும்பியுள்ளார். எனது பல உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவரது பெரும்பாலான தாக்குதல்கள் தனிப்பட்டவை.
நான் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீது வலுவான நம்பிக்கை கொண்டவன். ஆனால் சங்கரின் சமீபத்திய ட்விட் லெட்சுமண ரேகையை தாண்டிவிட்டது. மாரிதாஸ் என்பவர் மற்றொரு பிரபலமான யூடியூப்பர். அவர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் வழக்கு வகைப்படி என் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. நான் அரசு மற்றும் புகார்தாரரிடம் விசாரித்து வழக்கை ரத்து செய்தேன். இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார்.
என் தீர்ப்புகளை விமர்சிக்க சங்கருக்கு உரிமை உண்டு. ஆனால் இந்த புண்படுத்தும் ட்விட் மூலம் என் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார். மாரிதாஸ் வழக்கு விசாரணையின் போது காலையில் அழகர்கோவிலில் யாரை சந்தித்தீர்கள்? என என்னிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்விட்டிலிருந்து, அந்த நபரின் தூண்டுதல் தான் மாரிதாஸ் வழக்கில் பிரதிபலித்தது என்று கூறியுள்ளார். இது நீதித்துறை மீதான தெளிவான அவதூறு. இதற்காக சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப காலையில் உத்தரவிட்டேன். மாலையில் உத்தரவில் கையெழுத்திட்டேன். அந்த நேரத்தில் சங்கர் மற்றொரு ட்விட் பதிவு செய்துள்ளார். அதில், ‘ஒரு வக்கீல் நீதிபதியானா அவர் ஜூனியர் வழக்குகளை அவர் முன்னால் பட்டியலிடாதீர்கள் என்று உத்தரவு போடுவார்கள். ஆனால் ஜி.ஆர்.சுவாமிநாதன் சீனியர் ஆண்டனி அருள்ராஜ் இதற்கு விதி விலக்கு. சுவாமிநாதனுக்கு தெரியாத சட்டமா?’ குறிப்பிட்டுள்ளார்.
நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 70,014 வழக்குகளை விசாரித்துள்ளேன். வாங்கிய சம்பளத்துக்கு முழுமையாக உழைத்ததாக நம்புகிறேன். காலை 9.30 மணி முதல் வேலை நேரம் தாண்டியும் பணிபுரிந்துள்ளேன். இதைகூட சவுக்கு சங்கர் கேலி செய்துள்ளார். சங்கர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் அமைச்சுப் பணியாளராக பணிபுரிந்து பல ஆண்டுகளாக பிழைப்பூதியம் (பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பாதி ஊதியம்) பெற்றவர் ஆவர்.
எந்த வேலையும் செய்யாமல் அரசிடம் பிழைப்பூதியம் பெற்ற நபர், வாங்கிய ஊதியத்துக்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும் என நினைக்கும் நீதிபதி மீது அவதூறு பரப்புகிறார். சவுக்கு சங்கருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க அரசுக்கு கடமை உள்ளது. சங்கர் மீது பாலியல் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட சிபிஐ வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு சமீபத்தில் முடக்கப்பட்டது. ஆனால் அவர் மற்றொரு கணக்கை தொடங்கியுள்ளார். புராணக்கதைகளில் அசுரன் கொல்லப்படும் போது மீண்டும் ஒருவர் வருவார். அதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு சங்கர் வருவது போல் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு எதிராக முகநூல், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கும் பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.
சவுக்கு சங்கர் எல்லை மீறியுள்ளார். இதனால் அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறது. பதிவுத்துறை சவுக்கு சங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக முகநூல், ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். சவுக்கு சங்கர் மீதான புகாரின் நிலை, அப்புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சமூகவலை தள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். வழக்கில் உதவ மத்திய உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' கூறியுள்ளார்.
இந்த உத்தரவில் சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய மூன்று ட்விட் பதிவுகளையும் குறிப்பிட்டுள்ளார்.