அதிகாரிகள் அழைத்தும் பெற்றோர் வரவில்லை: மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை

By காமதேனு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக வைக்கப்பட்டுள்ள மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை இன்று மாலை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாணவிக்கு ஆதரவாக நடந்த போராட்டம் கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது. அதன் காரணமாக மாணவியின் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் மரணம் குறித்து அவரின் பெற்றோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், தங்கள் மருத்துவர் ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் மனுவாக வைத்திருந்தனர். நேற்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் உடன் இருக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் தங்கள் மருத்துவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற மாணவியின் பெற்றோர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை சார்பில் இன்று காலை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நாளைய தினம் இந்த வழக்கை விசாரிக்க சம்மதித்துள்ளது. அதேநேரத்தில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தடை விதிக்க மறுத்துவிட்டது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயர்நீதிமன்றம் அமைத்திருந்த மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்வதற்கு தயாராக இருந்தனர். ஆனால் மாணவியின் தந்தை மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் மருத்துவமனைக்கு வரவில்லை.

இதையடுத்து அரசு தரப்பில் மீண்டும் இன்று உயர்நீதிமன்றத்தை நாடினர். பிரேத பரிசோதனைக்கு அனைத்தும் தயாராக இருந்தும் மாணவி தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று நீதிபதியிடம் முறையிட்டனர். அதனையடுத்து மாணவியின் பெற்றோர் இல்லாமலே பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. உச்சநீதிமன்றம் தடை வழங்காததால் மறு பிரேத பரிசோதனை நடைமுறையை தொடங்கலாம். அதேநேரத்தில் மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என்று மாணவியின் சொந்த ஊரான பெரிய நசலூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். அவர்கள் தரப்பிலிருந்து யாரும் வருவார்களா என மாலை 3 மணி வரை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனாலும் அவர்கள் தரப்பிலிருந்து யாரும் வராத நிலையில் மாணவியின் உடலின் மறு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE