தேனி அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பணம், கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிற்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலூத்து பகுதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன்படி, காவல்துறையினர் அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பாலூத்தைச் சேர்ந்த ஜெயபால் (55), அவரது மகன் ஜெயசூர்யா (38), மகள் சத்யா (39) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுந்தரபாண்டி (23) ஆகிய நால்வரும் சேர்ந்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் அவர்களிடமிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர். மேலும், இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தனர்? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.