‘மத நிகழ்ச்சிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது’ - யோகி ஆதித்யநாத் அதிரடி

By காமதேனு

கன்வர் யாத்திரை எனும் புனிதப் பயணம் சிவபக்தர்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார், கங்கோத்ரி, கோமுக் போன்ற இடங்களிலும், பிஹாரின் சுல்தான்கஞ்ச் பகுதியிலும் கங்கை நதியிலிருந்து நீரை எடுத்துச் செல்வது வழக்கம். தத்தமது பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூரா மகாதேவா, அவுகர்நாத் போன்ற கோயில்களிலும், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள வைத்தியநாதர் கோயிலிலும் அந்த நீரை அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை ஜூலை 14-ல் தொடங்கியது. டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்கும் புனிதப் பயணம் என்பதால் சாலைகளில் பெரும் கூட்டம் இருக்கும்.

இந்நிலையில், “சாலைகள் மக்கள் பயணிப்பதற்கானவை. எந்த ஒரு மத நிகழ்ச்சியும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக நேற்று (ஜூலை 18) உத்தர பிரதேச அதிகாரிகளுடன் காணொலி மூலம் உரையாற்றிய அவர், ஆன்மிகப் பயணங்கள் மற்றும் ஊர்வலங்களின்போது வாண வேடிக்கைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், சிவபக்தர்கள் கன்வர் யாத்திரை செல்லும் சாலைகளில் மருத்துவ முகாம்களை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு காவல் துறைக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

“ஷ்ராவண் (ஆவணி) மாதத்தில் சிவன் கோயில்களில் கணிசமான கூட்டம் இருக்கும். இதை எதிர்கொள்ள கோயில் நிர்வாகங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், விஷமத்தனமான தகவல்களைப் பரப்பி நிலைமையைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதுபோன்றவர்களுக்கு நாகரிக சமுதாயத்தில் இடமில்லை என்றும் கூறினார்.

ஜனநாயக நாட்டில் பேச்சுவார்த்தைக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு என்றும், பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தித்தான், அநாவசியமாக பொருத்தப்படும் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிந்தது என்றும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். அந்தந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் பேசி அமைதி நிலவ வழிவகுக்குமாறு அரசு உயரதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE