அச்சிட்ட பேப்பர்களில் வடை, பஜ்ஜி வழங்கக்கூடாது என அதிரடி உத்தரவு ஒன்றை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
மாலை நேரம் என்றாலே தேநீர்கடைகளில் வடை, பஜ்ஜி என பலகாரங்கள் போடும் பணிகளும் தீவிரப்படும். காலையோ, மாலையோ வடை, பஜ்ஜிகளோடு தேநீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படி டீக்கடைகளில் வடையைக் கொடுப்பதற்கென்றே செய்தித்தாள், அச்சிடப்பட்ட புத்தகங்கள் ஆகியவற்றை சின்னச் சின்னதாக கிழித்து வைத்திருப்பார்கள். இதேபோல் வடையை பார்சல் வாங்கும்போதும், பெரும்பாலும் அச்சிடப்பட்ட தாள்களிலேயே அவை மடக்கிக் கொடுக்கப்படுகிறது.
இதேபோல் வடையில் எண்ணெய் மிகுதியாக இருந்தால் அந்த பேப்பரிலேயே அந்த எண்ணெய்யை பிழியும் வழக்கமும் பலருக்கு இருக்கிறது. ஆனால் அச்சிடப்பட்ட காகிதத்தில் வடைகளை மடக்கிக் கொடுக்கும்போது அதில் அச்சுக்கு பயன்படுத்திய வேதிப்பொருள்களின் எச்சங்கள் பட்டு, உணவுப் பொருள் நஞ்சாகும் அபாயம் இருக்கிறது. இதனால் இது சின்னக் குழந்தைகளுக்கும், சற்றே ஆரோக்கியம் குறைந்தவர்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என வெகுநாள்களாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், ‘’தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடைகளில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை வழங்கத் தடைவிதித்துள்ளதோடு, தடையை மீறி அச்சிட்ட காகிதத்தில் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும்” எனவும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்யவும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.