‘அரசின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும்’ - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

By காமதேனு

அரசின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடத்தொடங்கினர். இந்த போராட்டம் இப்போது பலத்த கலவரமாக மாறியுள்ளது.

5 நாட்களாக அமைதியாக நடந்துவந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியதையடுத்து காவல்துறையினர் தடியடிக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில் கலவரக்காரர்கள் போலீஸாரின் வாகனத்துக்கு தீவைத்தனர், இதனால் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடத் தொடங்கியதான் அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீசித்தாக்கியதில் எஸ்.பி செந்தில் குமார், டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சின்னசேலம் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் காரணமாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE