‘மாணவி மரணத்துக்கு சிபிசிஐடி விசாரணை வேண்டும்’ - பள்ளி முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம்;போலீஸார் தடியடி

By காமதேனு

சின்னசேலம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளிக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் கல்வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17) சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றபோது மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் மிக தீவிர நிலையை அடைந்துள்ளது. மாணவி படித்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஊர்வலமாக சென்றனர். அதனால் அங்கு கூடிய காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுப்புகளை வைத்து தடுத்தனர். அதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டவாறு பள்ளியை நோக்கி முன்னேறினர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். பள்ளிக்கு முன்பாக சென்றவர்கள் பள்ளியை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்த நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தடியடியில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் மீது போராட்டக் காரர்கள் கல் வீசியதில் அவர்களும் காயமடைந்தனர்.

மக்கள் போராட்டத்தால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி அப்பகுதியில் பதற்றம் குறையவில்லை. போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகலவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE