'பெட்ரோலுக்காக 2 நாட்கள் வரிசையில் நின்றேன்; பயிற்சிக்கு செல்ல முடியவில்லை’ - கலங்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்

By காமதேனு

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னே இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்து தனது காரில் எரிபொருள் நிரப்பியதாகவும், இதனால் பயிற்சிக்குக்கூட செல்லமுடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடுமையான எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், மக்கள் பல நாட்கள் வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் நிரப்பும் சூழல் நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னே ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஆசிய கோப்பை கிரிகெட் மற்றும் எல்பிஎல் போட்டிகள் இந்த ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயிற்சிக்காக கொழும்பு மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று கிளப் சீசனில் கலந்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. இரண்டு நாட்களாக நான் எங்கும் செல்லவில்லை, ஏனென்றால் நான் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் நிற்கிறேன். அதிர்ஷ்டவசமாக இன்றுதான் எனக்கு எரிபொருள் கிடைத்தது. ஆனால் பத்தாயிரம் ரூபாய்க்குதான் பெட்ரோல் கிடைத்தது. இது அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

தற்போதைய இலங்கை நெருக்கடி குறித்தும் பேசிய அவர், "இதுபற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது, ஆனால் இப்போது எதுவும் சரியாக நடக்கவில்லை. சரியான நபர்கள் வந்தால் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். மக்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சர்வதேச ஆதரவைப் பெறலாம் ” என தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் சர்வதேச கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னே, ஆசியக் கோப்பை மற்றும் எல்பிஎல் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நடத்த உள்ளது. ஆனால் சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டுடன், பொருளாதார நெருக்கடியையும் இலங்கை தற்போது சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் எப்படி இதனையெல்லாம் சமாளித்து இந்த போட்டிகளை இலங்கை அரசு நடத்தப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE