சென்னை ஏர்போர்ட் அலர்ட்: அமைச்சர் சுப்பிரமணியனின் `குரங்கு அம்மை' எச்சரிக்கை

By காமதேனு

கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்திருந்த நிலையில் மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த வைரஸ். இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணிவது மட்டும் காட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே குரங்கு அம்மை என்ற நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சவுதி அரேபியால் இருந்து கேரளத்திற்கு வந்தவர். மேலும் 11 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை. சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்கு தினந்தோறும் வரும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பயணிகள் குரங்கு அம்மை நோய் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் உள்ளேயேயும், வெளியேயும் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு முகம், கைகளில் கொப்பளம் வந்தால் தெர்மல் ஸ்கேன் கேமரா மூலம் கண்டறியப்படுகிறது. குரங்கு அம்மை நோய் கண்டறியும் ஆய்வகம் தமிழகத்தில் அமைக்கப்படும். மக்கள் பெரிய அளவில் பதற்றம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE