ஜிபே மூலம் கும்பலுக்கு பணம் அனுப்பிய போலீஸ்: சீக்ரெட் ஆப்ரேஷனில் சிக்கிய கஞ்சா நெட்வொர்க்!

By காமதேனு

கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கு கல்லூரி மாணவர்களின் ஜிபே மூலம் பணம் செலுத்தி அவர்களை வளைத்துப் பிடித்துள்ளது சென்னை போலீஸ். அடுத்தடுத்து இதே பாணியைப் பயன்படுத்தியதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மறைவான இடத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மடக்கிப் பிடித்த கானாத்தூர் போலீஸார் விசாரணைக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் வடபழனியைச் சேர்ந்த மோகன் என்பவர், தங்களுக்குக் கஞ்சா சப்ளை செய்ததாகவும், அவரின் ஜிபே அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் கஞ்சா சப்ளை செய்வார் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த மாணவர்களின் செல்போனிலிருந்து ஜிபே மூலம் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை மோகன் என்பவருக்கு போலீஸார் அனுப்பி இருக்கிறார்கள். இதையடுத்து போரூரில் வந்து கஞ்சாவை வாங்கிக் கொள்ளுமாறு மோகன் கூறியிருக்கிறார். கஞ்சாவை வாங்குவது போல அங்குச் சென்ற காவல்துறையினர் மோகனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மோகனிடம் நடைபெற்ற விசாரணையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பவரைக் கைகாட்டியிருக்கிறார். இதையடுத்து அதே ஜிபே பாணியைச் செயல்படுத்திய காவல்துறையினர், மோகனின் ஜிபே கணக்கிலிருந்து செந்திலுக்குப் பணம் செலுத்தினர். இதையடுத்து அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே வந்து கஞ்சாவை வாங்கிக் கொள்ளுமாறு செந்தில் தெரிவித்துள்ளார். உடனே அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் செந்தில் மற்றும் அவருடன் வந்த திலீப்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. செந்திலிடம் நடைபெற்ற விசாரணையில் அம்பத்தூரைச் சேர்ந்த முரளி என்பவரிடம் பணம் கொடுத்து அனுப்பினால் விசாகப்பட்டினம் அருகில் உள்ள துளி என்ற ஊரிலிருந்து கஞ்சா வாங்கிவந்து, திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சப்ளை செய்வார் எனத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வேப்பம்பட்டில் ஆய்வு செய்து 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 12 கிலோ கஞ்சா, 15,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE