கேரளாவில் குரங்கு அம்மை: மருத்துவக் கண்காணிப்பில் 11 பேர்

By என்.சுவாமிநாதன்

கேரளத்தில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவரோடு தொடர்பில் இருந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் நேற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் கடந்த 12-ம் தேதி துபாயில் இருந்து கேரளா வந்தார். அவரோடு தொடர்பில் இருந்த 11 பேர் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், அவர் பயணித்த டாக்ஸி ஓட்டுனர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் நலமாகவே உள்ளார். அவரோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 21 நாள்கள் கண்காணிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட நோயாளி திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் உள்ளார். குரங்கு அம்மை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மைகொண்டது. 1958-ம் ஆண்டு, முதன்முதலில் டென்மார்க்கில் இது கண்டுபிடிக்கப்பட்டது ”என்றார்.

பத்துபேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டால் ஒருவரின் நிலை கவலைக்கிடம் ஆகும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குரங்கு அம்மை நோய்க்கு பிரத்யேக சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லாததால் கேரள சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போதைய சூழலில் பெரியம்மை தடுப்பூசியே இதற்கும் போடப்படுகிறது. மத்திய அரசும், குரங்கு அம்மை வைரஸைக் கண்டறிய நாடு முழுவதும் 15 ஆய்வகங்களை அமைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE