தம்பதிகளைக் கட்டிப்போட்டு 100 பவுன், 10 லட்சம் கொள்ளையடித்த முகமூடி கும்பல் கைது: விசாரணையில் போலீஸ் அதிர்ச்சி

By காமதேனு

தென்காசி மாவட்டம், ஆவுடையப்பனூர் கிராமத்தில் வயோதிகத் தம்பதியினரின் வீட்டில் புகுந்து 100 பவுன்நகைகள், பத்து லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தென்காசி மாவட்டம், ஆவுடையனூர் சிதம்பர நாடார் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(88), இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி (82). தம்பதி இருவருமே ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், இருமகள்கள் உள்ளனர். இதில் மகன் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவர்களது மகள்களில் ஒருவரான ராணி வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார். இவர் பணி முடிந்து தினமும் வீட்டுக்குச் செல்லும்போது தன் வயோதிக தாய், தந்தையைப் பார்த்துச் செல்வது வழக்கம். வழக்கமாக ராணி இரவு 8 மணிக்கு இவர்கள் வீட்டிற்குச் செல்வார்.

இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு வள்ளியூரில் உடன் பணிபுரியும் ஒருவர் ஓய்வு பெறுவதால் விருந்து உபசரணையும், பாராட்டு நிகழ்ச்சியும் இருந்தது. அதை முடித்துவிட்டு இரவு 10 மணிக்குத்தான் தன் பெற்றோரின் வீட்டுக்குச் சென்றார். வழக்கமாக ராணி வந்து காலிங் பெல் அழுத்திய பின்பே கதவு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அன்று கதவு திறந்தே கிடந்தது. ராணி உள்ளே சென்று பார்த்தபோது அவரது அம்மா, அப்பா இருவரும் சேரில், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வாயிலும் துணி வைக்கப்பட்டிருந்தது.

அவர்களிடம் ராணி பேசியதில் இருந்தே வீட்டுக்குப் பின்வாசல் வழியாக ஏறிக்குதித்த மங்கி குல்லா அணிந்த முகமூடிக் கும்பல், அவர்கள் வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் பத்துலட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. வயதான இருவரும் பென்ஷன் வாங்குவதையும், மகள் ராணி தாமதமாக வருவார் என்பதையும் கணித்த உள்ளூர் கும்பல் தான் இப்படி வீட்டுக்குள் இறங்கியிருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸாரின் தீவிர விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(39), அவரது கூட்டாளிகள் குமரிமாவட்டம், முட்டத்தைச் சேர்ந்த ஜான் விமல் சதீஷ்(34), சென்னை பட்டரைவாக்கம் குளக்கரை தெருவைச் சேர்ந்த பாஸ்கர், கமல்ராஜ், பூந்தமல்லி வஜாகத் அலி, தேனியைச் சேர்ந்த நல்லுசாமி ஆகியோர் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

முதியவர் அருணாச்சலத்திற்கு சொந்தமாக வணிக வளாகம் உண்டு. அதில் மாரியப்பன் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். மாரியப்பன் கடைக்கு வாடகை பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் தன் வீட்டிற்கு புதிய இரும்புக்கதவு வாங்கியிருக்கிறார். அதற்கான 22 ஆயிரம் ரூபாயைக் கொடுக்காமல் வாடகையில் கழித்திருக்கிறார். இதனால் மாரியப்பனுக்கும், அருணாச்சலத்திற்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் அருணாச்சலம் மாரியப்பன் மீது போலீஸில் புகார்கொடுத்து கடையைக் காலி செய்துள்ளார். இந்த முன்விரோதத்திலேயே மாரியப்பன் தன் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு கொள்ளையடித்துள்ளார். கொள்ளைப்பணத்தைப் பிரித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாகச் சென்றுவிட்டனர்.

ஆனாலும் மாரியப்பனிடம் சமீபகாலமாகப் பணப்புழக்கம் அதிகரித்ததால் போலீஸார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். அதில் தான் இந்த கொள்ளைச் சதி வெளியே வந்தது. 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 3.59 லட்சம் பணம், 50 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டது. இந்த கும்பலோடு தொடர்புடைய மேலும் சிலரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE