`தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட ஜாதி எது?'- பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேள்வியால் பெரும் அதிர்ச்சி

By காமதேனு

ஜாதியை ஒழிக்க போராடிய தந்தை பெரியாரின் பெயரால் அமைந்துள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் எது தாழ்ந்த ஜாதி என்று கேட்கப்பட்ட கேள்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை உள்ளிட்டவைகளுக்காக போராடிய, உழைத்தவரான தந்தை பெரியாரின் பெயரால் சேலத்தில் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் எது தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு ஜாதிகள் குறிப்பிடப்பட்டு, இவற்றில் எது தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "அந்த கேள்வித்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது அல்ல. பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. அந்தக் கேள்வித்தாள் கசிந்து விடக்கூடும் என்பதால் அதனை படித்து பார்க்கும் வழக்கம் பல்கலைக் கழகத்தில் இல்லை. இது குறித்து எந்த புகாரும் தனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஜாதியை ஒழிப்போம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் நிலையில், ஜாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே இப்படிப்பட்ட கேள்வி எழுந்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE