ஒருபுறம் அமைச்சர் உரை... மறுபுறம் தூங்கி வழிந்த அதிகாரிகள்: சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்!

By மு.அஹமது அலி

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது துறை சார்ந்த அலுவலர்களும், காவலர்களும் தூங்கி வழிந்த சம்பவம் சிவகங்கையில் அரங்கேறி உள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். காவல்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

ஆய்வுக் கூட்டம்

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதிவேகத்தில் வரும் வாகனங்களால் அதிக அளவு விபத்து நடப்பதாகவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கும் போது, அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்கள் நலன் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பேசி கொண்டிருக்கும் போது அதிகாரிகள் பலரும் பொறுப்பற்ற முறையில் இதுபோன்று தூங்குவது ஏற்புடையதல்ல என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE