கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த அதிருப்தியில் தொழிலாளி ஒருவர் இப்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள கோட்டைக்கருங்குளம் வடிவம்மாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்(42) தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது கோட்டைக்கருங்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். வேலைக்கே செல்லாமல், பலரிடமும் கடன்வாங்கி செலவு செய்து முருகன் தேர்தல் வேலை செய்தார். ஆனால் அவர் தோல்வியடைந்தார்.
ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு பணத்தை இழந்ததோடு, கடனாளியாகவும் ஆன முருகனை விட்டு அவர் மனைவி திரெளபதி பிரிந்து தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஒருபக்கம் தேர்தல் தோல்வியினால் எழுந்த கடன், மறுபுறம் மனைவி பிரிவு இதனால் மன வருத்தத்தில் இருந்த முருகன் இன்று காலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேர்தல் தோல்வியினால் கடன் ஏற்பட்டு தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் கோட்டைக்கருங்குளம் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.