கேஒய்சி அப்டேட் ஓகே... போனை துண்டித்த சில மணி நேரத்தில் 10 லட்சம் அபேஸ்: முன்னாள் ஐடி அதிகாரிக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம்!

By ரஜினி

முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்தை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை சேத்துபட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். முன்னாள் வருமான வரித்துறை அதிகாரியான இவர் சில தினங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், "பிஎஸ்என்எல் எண் செயலிழக்காமல் இருக்க 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதனை நம்பி அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டேன். முதலில் அந்த செல்போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. அதன்பின் மறுநாள் மற்றொரு நம்பரில் இருந்து அண்ணாநகர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி பல்வேறு தகவல்களை தன்னிடம் இருந்து பெற்றனர்.

மேலும் KYC வாடிக்கையாளர் பற்றிய தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டு விட்டதாக கூறி இணைப்பை துண்டித்தனர். அழைப்பு துண்டிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே தனது வங்கி கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிப்பட்டது. தான் எந்தவித OTP-ம் தெரிவிக்கவில்லை. 10 ரூபாய் செலுத்துமாறு அவர்கள் லிங்க் அனுப்பினர். பின்னர் வங்கி கணக்கில் இருந்து பத்து லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பின்னர் வழக்கை சைபர் க்ரைம் காவல்துறைக்கு மாற்றம் செய்தனர். இதையடுத்து, காவல்துறையினர் இந்ந நூதன திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். மேலும், முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலாளர் சிவராமனின் நண்பர் என்பதால் பணத்தை இழந்த வருமானவரித்துறை அதிகாரி சீனிவாசன் நேரடியாக மயிலாப்பூர் எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்று மேலாளரை அணுகிய போது, கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொல்கத்தா, சூரத், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்சத்தில், 7 லட்சம் ரூபாயை முடக்கி மீண்டும் சீனிவாசன் கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் நூதன திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE