`ஒரே சிறுமியிடம் மாதந்தோறும் பலமுறை கருமுட்டை எடுத்திருக்கிறார்கள்'- அமைச்சர் அதிர்ச்சி தகவல்

By காமதேனு

"ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.

சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர், விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை என்றும் அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஒரு முறைதான் கருமுட்டை தானம் தர வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என்றும் இரண்டு தனியார் மருத்துவமனைகளும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE