கன்னியாகுமரி மாவட்டம், இரையுமன்துறை கடல் பகுதியில் இன்று ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது திருவனந்தபுரத்தில் தன் ஃபேஸ்புக் தோழியை தேடிச் சென்ற நபராக இருக்கக்கூடும் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணையத் தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலம், நரிமான்மூடு பக்தியைச் சேர்ந்தவர் கிரண். இவருக்கு ஆழிமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரோடு முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பெண்ணிடம் இடையில் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கிரண் தன் முகநூல் காதலியை சந்திக்க ஆழிமலை பகுதிக்கு தன் நண்பருடன் சென்றுள்ளார். அவரது வீட்டைச் சுற்றி சுற்றி வந்துள்ளார். இதுகுறித்து தன் குடும்பத்தினரிடமும் அந்தப் பெண் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கிரணையும், அவரது நண்பரையும் பிடித்து காரில் ஏற்றி ஆழிமலை கடல்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய கிரண், அதன் பின்னர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. கிரணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவரது முகநூல் தோழியின் குடும்பத்தினரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆழிமலை கடல் பகுதியில் கிரண் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து கிரண் தப்பியோடும்போது கடலில் விழுந்திருக்கலாம். அல்லது கேரளத்தில் கனமழையும், சூறைக்காற்றும் வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதனால் கிரண் அலையின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்திலும் கடலோரக் காவல்படையினர் கிரணின் உடலைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் குமரிமாவட்டம், இரையுமன் துறையில் கிரணின் வயதை ஒத்த ஆண்சடலம் ஒதுங்கியுள்ளது. அதேநேரம் 5 நாள்கள் தண்ணீரிலேயே இருந்ததால் உடல் அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு சேதமாகி இருந்தது. இதனால் கேரளத்திலிருந்து வந்த கிரணின் குடும்பத்தாராலும் அடையாளம் கண்டு உறுதிசெய்ய முடியவில்லை.