மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதில், நீமுச் மாவட்டத்தின் மானஸா தாலுகாவில் உள்ள தேவ்ரன் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் அப்பகுதியைச் சேர்ந்த ராஜு தய்மா. தனக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்குப் பணமும் கொடுத்திருக்கிறார். எனினும், தேர்தலில் அவர் தோல்வியடைந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது உதவியாளர் கன்னையா பன்ஸாராவுடன் சேர்ந்து வாக்காளர்களை மிரட்டியிருக்கிறார். தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தனக்கு வாக்களிக்காதது ஏன் என்று கேட்டதுடன், பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறும் மிரட்டித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இதுதொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, நேற்று (ஜூலை 12) அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் ராம்புரா காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதேசமயம், வாக்குக்குப் பணம் கொடுத்ததாக அவர் மீது இன்னமும் வழக்கு தொடரப்படவில்லை. அதுதொடர்பாக விரைவில் வழக்கு பதிவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது மிரட்டலுக்குப் பலன் கிடைக்காமல் இல்லை. 4 லட்ச ரூபாயை வாக்காளர்களிடமிருந்து அவர் வசூலித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.