ஆளுநர் தன்னிச்சையான முடிவெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பாக இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருப்புக் கொடி ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். மேலும், சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இவ்விழாவிற்கு இதுவரை இல்லாத நடைமுறையாக சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், தமிழக அரசை ஆலோசிக்காமலே பட்டமளிப்பு விழா தேதி குறிப்பிடப்பட்டு நடைபெறுவதாகவும், ஆளுநர் பட்டமளிப்பு விழா மேடையை பாஜகவின் பிரச்சார மேடையாக பயன்படுத்துகிறார் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு விழாவை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பாக இந்திய மாணவர் சங்கம், சமூக நீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருப்புக் கொடி ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, ஆளுநர் விழாவில் கலந்துகொண்ட நிலையில் விழா காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளுக்குப் பின்னரே விழாவில் பங்கேற்பவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.