`கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும்'- வைரமுத்துவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

By காமதேனு

தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து மடல் அனுப்பி இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து மடலில், “அகவை எழுபதில் அடியெடுத்து வைப்பதும்-அதில் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றியதுமான பெருவாழ்வு உங்களுடையது. முதல் இருபது வயது வரை மட்டுமே தனிவாழ்க்கையாக அமைந்து, அடுத்து அடியெடுத்த ஆண்டு முதல் கலை, இலக்கிய, திரையுலக வாழ்க்கையாக அமைந்துள்ளது உங்களது வாழ்க்கை. 38 நூல்கள், 7,500 பாடல்கள் என்பது எண்ணிக்கையாகக் கருத முடியாது.

தமிழ் இலக்கிய வாசிப்பாளர்களது இல்லத்தின் அலமாரி தோறும் உங்கள் படைப்புகள் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது. திரையுலக ரசிகர்கள் உள்ளம் தோறும் குடிகொண்டிருப்பவை உங்கள் பாடல்கள். வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் விருதுக்குரிய புத்தகங்களாக இருப்பதும், எழுதிய புகழ்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் பரிசுக்குரியதாக இருப்பதும் உங்களது திறமைக்குச் சாட்சி. ஏழு தேசிய விருதுகள் பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்பது சாதாரண உயரமல்ல. அதேபோல தமிழ்நாடு அரசு விருதை 6 முறை பெற்றுள்ளீர்கள். கவிஞர்களுக்கெல்லாம் பெரும் கவிஞரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கவிப்பேரரசு என்று வாழ்த்தினார் என்றால் அதைவிடப் பெரும்பாராட்டுத் தேவையில்லை. கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர், தமிழாற்றுப்படை ஆகிய படைப்புகள் தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும்.

இவை அனைத்தையும் தாண்டி திராவிட இயக்கம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என தாங்கள் வலம் வந்ததுதான் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சி. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இன்று இருந்திருந்தால் உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார். இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கவிப்பேரரசாற்றுப்படை தொடரட்டும்” என வாழ்த்தியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE