ராமேஸ்வரம் டு இலங்கைக்கு சென்ற கஞ்சா... நடுக்கடலில் நடந்த கடத்தல்: அதிர்ந்துபோன கடற்படை

By காமதேனு

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 225 கிலோ கஞ்சா பார்சல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். நடுக்கடலில் கஞ்சா கடத்தப்பட்டது கடற்படையினரை அதிரவைத்துள்ளது.

இலங்கை வடமத்திய கடற்படை பிரிவை சேர்ந்த கடத்தல் தடுப்பு பிரிவினர், தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தலைமன்னார் தேவம்பிடி கடற்கரை பகுதியில் இவர்கள், ஒரு படகை சோதனை செய்தனர். படகின் வலைக்கு அடியில் 99 கஞ்சா பார்சல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. படகுடன் 225 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய கடற்படையினர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 2 கோடியாகும். நேற்று காலை படகில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பார்சல்கள், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். நேற்று இலங்கை தலைமன்னாரில் இருந்து வந்த படகில் 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். மணல் திட்டில் இவர்களை இறக்கி விட்ட இலங்கை படகு உடனடியாக திரும்ப சென்றுவிட்டது. ஆனால் இந்த படகு திரும்பி செல்லும்போது ராமேஸ்வரத்தில் இருந்து கடத்தல் நபர்களால் கஞ்சா பார்சல்கள், நடுக்கடலில் வைத்து இலங்கை மீன்பிடி படகிற்கு மாற்றப்பட்டு கடத்தி வந்திருக்க வாய்ப்புள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE