தஞ்சாவூர் அருகே கோயில் மஞ்சள் நீர் விளையாட்டின் போது ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்குதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே இனாத்துகான்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சுபாஷ் சந்திர போஸ்( 27). இவர் மீது தஞ்சாவூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 11-ம் தேதி அங்குள்ள சியாமளா தேவி அம்மன் கோயில் திருவிழா நடந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த சுபாஷ் சந்திர போஸ்க்கும் அவரது உறவினர்களான ஜோதி ராஜனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
ஊர்ப் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு திருவிழாவின் மறுநாளான நேற்று இரவு கோயில் சார்பில் மஞ்சள் நீர் விளையாட்டு விழா நடைபெற்று இருக்கிறது. அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுபாஷ் சந்திரபோஸ் கையில் அரிவாளுடன் இருந்திருக்கிறார்.
முன்தினம் தகராறு நடந்த அவரது தூரத்து உறவினரான ஜோதிராஜன் மற்றும் சிவக்குமார் மீது அவர் மஞ்சள் நீரை வேண்டுமென்றே ஊற்றி தகராறு செய்ததாக தெரிய வருகிறது. அதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிராஜனும், சிவகுமாரும் சேர்ந்து சுபாஷ் சந்திர போஸை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சுபாஷ் சந்திரபோஸ் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தினர் சுபாஷ் சந்திரபோஸ் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் குற்றவாளிகளை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.