மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் அவரை பணியிடை நீக்கம் செய்து சிஐஎஸ்எஃப் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது மதுரை விமான நிலையம். தினமும் இங்கு பத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த விமான நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். அதன்படி நூற்றுக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சிஐபிஎஃப் ஆய்வாளரான துருவ்குமார் ராய் நேற்று இரவுப் பணியை முடித்துவிட்டு 9 எம்எம் தோட்டா வகை துப்பாக்கியை மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் ஒப்படைத்தார். அப்போது, துப்பாக்கி எதிர்பாராதவிதமாக தானாக சுடத் தொடங்கியது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், இந்த துப்பாக்கி சுடப்பட்ட போது நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தவறுதலாக துப்பாக்கியை கையாண்ட காவலரை பணியிட நீக்கம் செய்து தமிழக சிஐஎஸ்எஃப் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.