‘சிறையில் இருக்கும் பெரும்பாலானோரைக் கைதுசெய்திருக்க வேண்டியதே இல்லை!’ - உச்ச நீதிமன்றம் கருத்து

By காமதேனு

விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருக்கும் பலரைக் கைதுசெய்திருக்க வேண்டியதே இல்லை எனக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், பிணை வழங்குவதை எளிமைப்படுத்தும் வகையிலும், நெறிப்படுத்தும் வகையிலும் புதிய சட்டத்தைக் கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.

நாட்டின் விசாரணை அமைப்புகள், தனிமனிதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதைவிடவும் கைதுசெய்தல் எனும் கொடூரமான அதிகாரத்தை நாடும் மனநிலையையே வெளிப்படுத்துவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (ஜூலை 12) வெளியிடப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி சுந்தரேஷ், ‘இந்தியாவின் சிறைகள் விசாரணைக் கைதிகளால் நிரம்பியிருக்கின்றன. சிறையில் உள்ள கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர், விசாரணைக் கைதிகள் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டியதே இல்லை’ என்று தெரிவித்தார்.

‘விசாரணைக் கைதிகளில் பலர் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள். அவர்களில் பெண்களும் அடக்கம். அவர்களது சமூகச் சூழல்தான் அவர்களைக் குற்றக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளுகிறது’ என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 'மிகவும் அவசியமான தருணங்களில் மட்டுமே கைது நடவடிக்கையில் விசாரணை அமைப்புகள் ஈடுபட வேண்டும்; ஆனால் அவை அப்படிச் செய்யத் தவறிவிடுகின்றன. ஜனநாயக அமைப்பில் ஒரு தேசம் வரம்பற்ற அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தும் அரசாகக் கருதத்தக்க வகையில் செயல்படக் கூடாது. இரண்டும் கருத்தியல் ரீதியாக ஒன்றுக்கொன்று மாறுபட்டவை’ என்றும் சுட்டிக்காட்டியது.

இதுதொடர்பான பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கும் உச்ச நீதிமன்றம், பிணை வழங்குவதை எளிமைப்படுத்தும் வகையிலும் நெறிப்படுத்தும் வகையிலும் ஒரு விரிவான சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE