கேரளத்தில் கனமழைக்கு 6 பேர் பலி: நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

By காமதேனு

கேரளத்தில் கடந்த சில தினங்களாகவே பெய்துவரும் கனமழைக்கு ஆறுபேர் பலியாகி இருப்பதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக கடந்த 3-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது பெய்த கனமழையில் வீடு சேதம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு என மழை தொடர்பான அசம்பாவிதங்களால் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் மீண்டும் நேற்று மாலைமுதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணம் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. இதில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பத்து மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து ஏனைய எட்டு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் வானிலை ஆய்வுமையம் இன்று காலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வரும் 14-ம் தேதிவரை கேரள கடற்கரைகளில் 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர்வரை காற்றுவீசும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE