மலை உச்சியில் பாதை மறந்து தவித்த சிறுவர்கள்... 8 மணி நேரம் போராடி மீட்பு!

By KU BUREAU

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் மும்ப்ரா காதி மெஷின் அணை அமைந்துள்ளது. மலையேற்றத்தில் ஈடுபடவும், அணைப்பகுதியில் நண்டுகளை பிடிக்கவும் சிறுவர்கள் அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று இந்த பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவிய நிலையில், 5 சிறுவர்கள் மாலை 4 மணியளவில் மலைப்பகுதிக்கு தனியாக செல்ல முடிவு செய்துள்ளனர்.


7 முதல் 11 வயது வரையிலான இந்த 5 சிறுவர்களும் மலை மீது ஏறிக் கொண்டிருந்த போது திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் திரும்பி கீழிறங்கி செல்லும் வழியை மறந்து விட்ட சிறுவர்கள், மலையில் சிக்கித் தவித்துள்ளனர். வெளியில் சென்ற சிறுவர்கள் மாலை வரை வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.


சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் சென்றபோது அங்கு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், சிறுவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், விடிய விடிய மீட்புப் படையினர் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில், 5 சிறுவர்களும் மலை உச்சியில் மழையில் நடுங்கியபடி பத்திரமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மீட்ட பேரிடர் மீட்புப் படையினர், மலையடிவாரத்துக்கு கொண்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE