காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By காமதேனு

கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. தண்ணீர் திறக்கும் அளவு அதிகரித்திருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை கர்நாடகாவில் தீவிரம் அடைந்துள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களும் நிரம்பி வழிகின்றன. இதேபோல் அணைகளும் வேகமாக நிரம்பிவருகின்றன.

இதனால் அணை பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தலா 25 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரிக்கு வரும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணைக்கு மணிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், கபினி அணைக்கு 27 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE