தமிழகத்தைச் சேர்ந்த இருவரைக் கடத்தி 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ஐந்து பேரை டெல்லியில் கைது செய்திருக்கிறார்கள் ஹரியாணா போலீஸார். ஜவுளித் துறையைச் சேர்ந்த இருவரையும், வணிகப் பரிவர்த்தனை எனும் பெயரில் தந்திரமாக அழைத்து கடத்தியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீஜெய்கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிபவர் வில்வபதி(56). அதே நிறுவனத்தில் கணக்கு மேலாளராகப் பணிபுரிபவர் வினோத் குமார்(28). இருவரும் டெல்லியில் உள்ள சிலரிடம் நெசவு நூல் விற்பனை குறித்து சமீபத்தில் பேசியிருந்தனர்.
இதையடுத்து நெசவு நூலுக்கான மூலப் பொருட்களின் சாம்பிளைக் கொண்டுவருமாறும், அதற்குப் பெரும் தொகை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இருவரிடமும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் பேசியிருக்கிறார்கள். இதை நம்பி டெல்லி சென்ற இருவரையும், ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஓர் இடத்தில் அடைத்துவைத்தது. பின்னர் இருவரின் குடும்பத்தாரையும் தொடர்புகொண்டு, இருவரையும் உயிரோடு விடுவிக்க வேண்டுமானால் 50 லட்ச ரூபாய் பிணைத் தொகை தர வேண்டும் என்று அந்தக் கும்பல் மிரட்டியது.
இதுதொடர்பாக திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜூலை 8-ல் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. தமிழகக் காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹரியாணா போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுடன் டெல்லி போலீஸின் சிறப்பு அதிரடிப் படையும் களத்தில் இறங்கியது.
தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர், டெல்லியின் விஷ்ணு கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர்கள் இருவரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மீட்கப்பட்ட நிலையில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிஃப் ஹுசைன், முகமது கரீம், டெல்லியைச் சேர்ந்த ஜிர்வானி பாபு, முகமது ஆசாத் மற்றும் சோனு ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.