திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை: 15 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

பாலியல் பலாத்காரத்தால் 15 வயது சிறுமி வயிற்றில் வளரும் 24 வார கருவை உடனடியாக கலைக்க மருத்துவக்குழுவுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த பள்ளி செல்லும் 15 வயது சிறுமி, வார இறுதி நாட்களில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி, சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு கொண்டுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சிறுமி கர்ப்பமானார். அவரது வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் நீதிபதி பேசினார். அப்போது சிறுமியின் வயது, கருவின் காலம் அடிப்படையில் கருவை கலைக்கலாம் என மருத்துவ அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியிடமும் நீதிபதி பேசினார். அப்போது, அந்த சிறுமி கருவை கலைக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைக்க வேண்டும். சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE