போலீஸ்காரரின் தந்தையை வழிமறித்து கழுத்தை அறுத்துக் கொலை: நிலத்தகராறில் வெறிச்செயலில் ஈடுபட்ட இருவர் கைது

By காமதேனு

நிலத்தகராறில் கரூர் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருபவரின் தந்தையைக் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஜாதிக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் உத்தப்பன். இவரது மனைவி சுப்பம்மாள். விவசாயியான உத்தப்பனுக்கு நாகபாலன் என்ற மகனும், முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். நாகபாலன் கரூர் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். உத்தப்பனுக்கு கொல்லபட்டியில் விவசாய நிலம் உள்ளது.

இவரது மனைவி சுப்பம்மாளின் உறவினரான கொல்லபட்டியைச் சேர்ந்த மணிமாலமுருகன் என்பவருக்கும் உத்தப்பனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இரு குடும்பத்தினருக்கும் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், உத்தப்பன் தனது நிலத்தில் விவசாயம் பார்க்காமல், விவசாய கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை தோட்டத்தில் கூலி வேலை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உத்தப்பனை வழி மறித்த மணிமாலமுருகன் மற்றும் அவரது உறவினர் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உத்தப்பனின் கழுத்தை அறுத்ததில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை காவல்துறையினர் உத்தப்பனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டார். பின்னர், உத்தப்பனை கொலை செய்த மணிமாலமுருகன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் இன்று காலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE