திட்டக்குடி அருகே பள்ளி மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த கொடிக்களத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் மே 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அந்நிகழ்ச்சியில் திட்டக்குடியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் கலந்து கொண்டனர். கேக் வெட்டிய போது மாணவ, மாணவியர் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
பிறந்த நாள் கொண்டாடிய மாணவர் வேலைக்கு சென்னைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மாணவியிடம் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஆவினங்குடியைச் சேர்ந்த மாணவர், "பிறந்த நாள்விழாவில் நீ கொடிக்களம் மாணவருடன் இருக்கும் போட்டோ இருக்கிறது. அதை உன் வீட்டில் தராமல் இருக்க நான் கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும்" என்று மிரட்டியுள்ளார்.
அதன்பேரில் கடந்த 1-ம் தேதி பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவரின் வீட்டுக்கு மாணவி சென்றார். வீட்டுக்குள் மாணவிக்கு மிரட்டல் விடுத்த மாணவர், மேலும் 2 மாணவர்கள் இருந்துள்ளனர். அந்த மாணவியை அவர்கள் மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் பயந்து போய் அந்த மாணவி நடந்த விவகாரத்தை வெளியே சொல்லவில்லை.
இந்த நிலையில், மாணவர்கள் தங்கள் எடுத்த வீடியோவை சென்னைக்கு சென்ற கொடிக்களத்தைச் சேர்ந்த மாணவருக்கு அனுப்ப ஆவினங்குடியைச் சேர்ந்த மற்றொரு மாணவரின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையறிந்த ஆவினங்குடி மாணவர் மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போய் இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று மாணவி வீட்டில் கூறியுள்ளார். என்ன நடந்தது என்று அவரது தாய் விசாரித்த போது, நடந்த விஷயத்தை மாணவி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், ஆவினங்குடி போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்ட மாணவர்களின் செல்போனை சோதனை செய்த போது அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது. இதையடுத்து ஆவினங்குடியை சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்ததாக கொடிக்களத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் உட்பட என 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.