மோதிரம், செயினுக்காக விடுதி மேலாளர் கொலை?: மதுரையில் பரபரப்பு

By காமதேனு

மதுரையில் உள்ள தனியார் விடுதி மேலாளர் மூக்கில் ரத்தம் வடிய மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

மதுரை மாநகர் ரயில்நிலையம் எதிரே உள்ள டவுன்ஹால் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்(50). இவர் 15 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இன்று விடுதியில் இருந்த அறை ஒன்றில் மேலாளர் தர்மராஜ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பணியாளர்கள் திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, நேரில் வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். தர்மராஜ் உயிரிழந்த நிலையில் அவர் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம், மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் ஆகியவை காணாமல் போயிருந்தது.

தர்மராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது நகைக்காக ஆதாயக்கொலை எதுவும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அருகிலுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE