இனி திருட முடியாது... உயிரிழப்புகளை தடுக்கும்: சென்னை மெரினாவை கண்காணிக்கிறது ட்ரோன்

By காமதேனு

சென்னை மெரினாவில் வழிப்பறி மற்றும் உயிரிழப்புகளை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக மெரினா கடற்கரை திகழ்கிறது. மெரினா கடற்கரையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பொழுதை கழித்து வருகின்றனர். பலர் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதுடன வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மெரினா கடற்கரைக்குச் சுற்றிப் பார்க்க வந்து கடலில் குளித்து மகிழ்கின்றனர். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் கடலின் சீற்றம் மற்றும் கடலுக்குள் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் குளிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு சுழல், மணலில் சிக்கி உயிரிழக்கும் துயர சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, மெரினா கடற்கரைப் பகுதியில் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். இருப்பினும் தடை மீறி பலர் கடலில் குளித்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அங்காங்கே எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் கடற்கரை மணற்பரப்பில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறியும், காவல் துறையினரின் கண்காணிப்பை தாண்டியும் பொதுமக்கள் பலர் கடலின் ஆபத்தை உணராமல் தொடர்ந்து கடலில் குளித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி பட்டப்பகலில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், காதல் ஜோடிகள் உள்ளிட்டோரிடம் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் ட்ரோன் மூலம் காண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று ட்ரோன்களை பயன்படுத்தி மெரினா கடற்கரை எல்லையில் பொதுமக்கள் யாரேனும் குளிக்க கடலுக்குள் இறங்குகிறார்களா? என காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் கடலின் ஆபத்தை உணர்ந்து, தங்கள் உயிருக்கு முக்கியத்துவம் அளித்து கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE