அலங்காநல்லூரில் விரைவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு உத்தரவு

By காமதேனு

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவை இன்னும் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்திடும் வகையில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் விரைவில் உருவாக இருக்கிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின காளைகளை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யவும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ்பெற்றது. குறிப்பாக அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

உலக சுற்றுலாப்பயணிகள் முதல் உள்ளூர் பார்வையாளர்கள் வரை லட்சக்கணக்கானோர் அலங்காநல்லூரில் திரள்வார்கள். ஆனால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் மிகுந்த இடநெருக்கடியான பகுதி என்பதால் பெரும்பாலான பார்வையாளர்கள், ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க முடியாமல் திரும்ப நேரிடுகிறது.

அரசு அமைக்கும் விஐபி கேலரிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமே அனுமதி உண்டு. உலக சுற்றுலாப் பயணிகள் கேலரியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் குடும்பத்தினர் மட்டுமே அமர்ந்து பார்வையிடுவதற்கு ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது. அதனால், அனைத்து பார்வையாளர்களும் போட்டியை கண்டுகளிக்க அலங்காநல்லூரில் நிரந்தரமாக பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று அதன் ஆர்வலர்கள், வீரர்கள், மாடுபிடிவீரர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளை ஏற்று அலங்காநல்லூாில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கா் இடத்தை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அந்த இடத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். தற்போது ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்காக விரிவாக திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதத்தில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் வரும் ஆண்டில் தொடங்க வாய்ப்புள்ளதாக அதன் ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE