கரோனா காலத்தில் 567 கோடிக்கு விற்பனை: டோலோ 650 மாத்திரை உற்பத்தி செய்யும் 40 நிறுவனத்தில் ஐடி ரெய்டு!

By காமதேனு

டோலோ 650 மாத்திரை உற்பத்தி செய்யும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

கரோனா தொற்று காலத்தில் டோலோ 650 மாத்திரை 567 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்நிலையில் டோலோ 650 மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் உட்பட சென்னை, கோவா, பஞ்சாப், டெல்லி உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பேங்க் தெருவில் அமைந்துள்ள மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் 1973ல் ஜி.சி சுரனா என்பவரால் பெங்களூருவில் நிறுவப்பட்டது. அதன்பிறகு இந்த நிறுவனத்தை அவரது மகன் திலீப் சுரானா நடத்தி வருகிறார். டோலோ 650 மாத்திரை தவிர, உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஆம்லாங் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்தான டெனெப்ரைடு போன்ற பிராண்டுகளையும் இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2,700 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக இணையதளங்களில் வருவாய் காட்டி, வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சோதனையில் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE