பதறவைத்த செல்போன் மெசேஜ்: 10 ரூபாய் அனுப்பி விட்டு 4.42 லட்சத்தை இழந்த முன்னாள் அரசு அதிகாரி!

By காமதேனு

மின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வந்த குறுந்தகவலை தொடர்ந்து, அதில் உள்ள எண்ணைத் தொடர்பு கொண்டு பத்து ரூபாய் அனுப்பியவரின் வங்கிக் கணக்கிலிருந்து 4.42 லட்சம் நூதன முறையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

வேலூர், காட்பாடி பாரதி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (66). இவர் வேலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் அவரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், கடந்த 2 மாதத்துக்கான வீட்டு மின்கட்டணம் இதுவரை செலுத்தவில்லை. அதனை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று செல்போன் எண் பதிவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசிய பாண்டியன், கடந்த 2 மாதத்துக்கான மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய மர்மநபர் சர்வர் பிரச்சினை காரணமாக ஆன்லைனில் நீங்கள் செலுத்திய மின்கட்டணம், மின்சார வாரியத்தின் கணக்கில் சேரவில்லை. சிறிது நேரத்தில் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும், அந்த பணத்தை செல்போன் செயலி மூலம் செலுத்தும்படி கூறி உள்ளார்.

மேலும் அந்த செயலிக்கான லிங்க்கை பாண்டியன் செல்போனுக்கு மர்மநபர் அனுப்பினார். முதற்கட்டமாக அந்த செயலி செயல்படுவதற்கு ரூ.10 ரீசார்ஜ் செய்யும்படியும், பின்னர் மின்கட்டணம் செலுத்தும்படியும் தெரிவித்தார். இதையடுத்து பாண்டியன் அந்த செயலி மூலம் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தார். அதையடுத்து சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் வைத்திருந்த 4,41,999 ரூபாயை இரண்டு தவணைகளில் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பாண்டியன் வேலூர் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE