அண்ணா பல்கலைக் கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெருவாரியான மாணவர்கள் தோல்வி அடைந்ததற்குப் பல்கலைக் கழக கல்லூரிகளில் தரமற்ற கல்வி வழங்கப்படுவதே இதற்குக் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 476 பொறியியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா, ஆய்வக வசதிகள் இருக்கின்றனவா என நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 225 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கு மேல் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 62 பொறியியல் கல்லூரிகளில் 25-50 சதவீதம் வரையும், 166 கல்லூரிகளில் 25 சதவீதத்திற்குக் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பதும், 23 பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு போதிய தகுதி இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக 225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மேலும் இரண்டு வாரங்களில் இது குறித்து பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முறையாகப் பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. 2021 நவம்பரில் நடைபெற வேண்டிய பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் கரோனா காரணமாகக் கடந்த மார்ச் மாதம் காலதாமதமாகத் தொடங்கியது. இன்று வெளியான அந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளில் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 62 சதவீத மாணவர்கள் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.